கரீபியன் தீவில் கடும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.6 என பதிவு.. சுனாமி எச்சரிக்கை
09 Feb,2025
கரீபியன் கடலில் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில் கேமன் தீவு உள்பட 3 தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கண்டத்தின் ஒரு பகுதியாக கரீபியன் தீவு உள்ளது. இங்கு மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகள் உள்ளன. இதில் கடற்கரையையொட்டி சில தீவுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கரீபியன் தீவில் உள்ள கேமன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6.23 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.6 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் கரீபியன் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்காவின் புவியியல் சர்வே அமைப்பு உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு, ‛‛கரீபியன் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கேமன் தீவில் இருந்து 209 கிலோமீட்டருக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் கடலில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 6.23 மணிக்கு ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.6 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக கேமன் தீவு, புவெர்ட்டோ தீவு மற்றும் அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சர்வதேச சுனாமி தகவல் மையம் சார்பில், ‛‛இந்த நிலநடுக்கத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சில இடங்களில் உருவாகலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கையால் கடற்கரைக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தீவில் இருந்து நிலத்துக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.