பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து காசா மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கினால் இஸ்ரேல் மீது போரை தொடங்குவோம் என்று அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்காவுக்கு இஸ்லாமிய நாடான ஜோர்டான் வார்னிங் செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இந்த பிரச்சனை போராக மாறியது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கும் நுழைந்து காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு இஸ்ரேல் போரை தொடங்கியது. கடந்த 15 மாதங்களாக நடந்து வந்தது. காசாவில் செயல்படும் ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இப்போது தற்காலிகமாக காசாவில் இஸ்ரேல் போரை நிறுத்தி உள்ளது. அதன்பிறகு கடந்த 4ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா சென்று அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். காசா மீதான போரில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்பிற்கு பிறகு பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது காசாவை அமெரிக்கா கைப்பற்ற போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதுபற்றி டொனால்ட் டிரம்ப் கூறிம்போது, ‛‛காசாவின் கதை முடிந்துவிட்டது. நரகத்தின் படுகுழியில் பாலஸ்தீன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களை மீண்டும் அதே காசாவில் வசிக்க சொல்வது சரியாக இருக்காது. அவர்கள் அங்கு வசிப்பதன் மூலம் 100 ஆண்டாக தொடரும் அதே சண்டை மீண்டும் நடக்கும். மக்கள் கொத்து கொத்தாக இறப்பார்கள். எனவே நான் மாற்றி யோசிக்க வேண்டும். காசாவை அமெரிக்கா கைப்பற்றப்போகிறது. அது இனி அமெரிக்காவுக்கு தான் சொந்தம். அங்கு நாங்கள் வேலையை செய்யப்போகிறோம். போர் பூமியில் குவிந்து கிடக்கும் குண்டுகள், வெடிமருந்துகள் உட்பட எல்லாவிதமான ஆயுதங்களையும் அப்புறப்படுத்துவோம். போரில் இடிந்து குவிந்து கிடக்கும் கட்டுமானங்களை அகற்றி காசாவை சமப்படுத்துவோம்.
வீட்டு வசதி, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பொருளாதார வளர்ச்சி கொண்டு வரப்படும். அதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவை காலி செய்ய வேண்டும். அவர்களை பக்கத்து நாடுகள் கனிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும். காசாவில் இருந்து மக்கள் முற்றிலும் வெளியேறிய பிறகு எங்கள் வேலையை நாங்கள் ஆரம்பிப்போம் காசா ஒரு சர்வதேச நகரமாக விளங்கும். அனைத்து நாட்டு மக்களும் அங்கு வாழ முடியும். பாலஸ்தீனியர்களும் அதில் இருக்கலாம். மத்திய கிழக்கின் அற்புதமான இடமாக காசா முனை மாறி விடும்'' என்றார்.
இதனை பெஞ்சமின் நெதன்யாகுவும் வரவேற்றார். ‛'உண்மையிலேயே டிரம்ப் எடுத்திருப்பது அற்புதமான முடிவு. மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவும் கூட. எல்லா பிரச்னைக்கும் தீர்வு தரும் நல்ல ஐடியா'' என்றார். இந்த முடிவுக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் மற்றும் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளன. காசா என்பது பாலஸ்தீனத்தின் பகுதியாகும். அங்கு வசிக்கும் மக்களை எந்த காரணம் கொண்டும் யாரும் வெளியேற்ற முடியாது.
அப்படி வெளியேற்றும்போது அது இஸ்ரேலுக்கு சாதகமாக மாறும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பல நாடுகள் கருத்து தெரிவித்து உள்ளன. இந்நிலையில் தான் பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள மக்களை வெளியேற்ற இஸ்ரேல் நடவடிக்கை எடுத்தால் அந்த நாட்டின் மீது போர் தொடுக்கப்படும் என்று ஜோர்டான் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதுபற்றி ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆய்மன் சபாடி கூறுகையில், ‛‛பாலஸ்தீன மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் எந்த அறிவிப்பையும் நாங்கள் நிராகரிக்கிறோம். அதேவேளையில் பாலஸ்தீன மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நினைத்தால் அவர்களுக்கு எதிராக நாங்கள் முழு பலத்தையும் காட்ட வேண்டிய சூழல் ஏற்படும். அதோடு அது ஜோர்டானுக்கான போர் அழைப்பாக பார்க்கப்பட்டு பதிலடி கொடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்
இதன்மூலம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சை தொடர்ந்து இஸ்ரேல், காசா மக்களை வெளியேற்ற நினைத்தால் அந்த நாடு மீது போர் தொடுக்கப்படும் என்று ஜோர்டான் பகிரங்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு என்பது இஸ்ரேல் - ஜோர்டான் இடையே போர் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ஜோர்டானும், இஸ்ரேலும் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. அதாவது இஸ்ரேலின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியின் எல்லையாக ஜோர்டான் தான் உள்ளது. அதோடு ஜோர்டான் என்பது இஸ்லாமிய நாடாகும்.
தொடக்கம் முதலே இஸ்ரேல் - காசா மோதலில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஜோர்டான் தான் உள்ளது. அதோடு காசா, பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் ஜோர்டானுக்கு அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. ஜோர்டானின் மக்கள்தொகை தற்போது ஒரு 1.13 கோடி என்ற அளவில் உள்ளது. இதில் 20 லட்சம் முதல் 30 லட்சம் பேர் பாலஸ்தீனர்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது இஸ்ரேல் நாடு உருவானதில் இருந்து காசா உள்பட பிற பாலஸ்தீன பகுதியில் இருந்து அவர்கள் அகதிகளாக ஜோர்டான் சென்று வசிப்பதாக ஐநா சபையின் டேட்டா தெரிவித்துள்ளது.
இதனால் வரும் நாட்களிலும் அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து காசா மக்களை வெளியேற்றும்போது அவர்கள் ஜோர்டானில் அகதிகளாக தஞ்சம் கோரலாம். ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் காசா மக்களுக்கு ஜோர்டான், எகிப்து நாடுகள் அகதிகளாக தஞ்சம் வழங்க வேண்டும் என்று கூறினார். இது ஜோர்டானுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஜோர்டானுக்கும் பொருளாதாரத்தில் அவ்வளவு சிறப்பான நாடாக இல்லை. இதனால் புதிதாக வரும் அகதிகளுக்கு அந்த நாட்டால் தேவையான உதவிகளை செய்ய முடியாது. இதனால் தான் ஜோர்டான்,
இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடங்குவோம் என்று கூறியுள்ளது. ஒருவேளை ஜோர்டான் இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடங்கினால் அது அந்த நாட்டுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் இஸ்ரேலை ஒப்பிடும்போது ஜோர்டானின் படை பலம், ஆயுத பலம் குறைவாகும். அதேபோல் இஸ்ரேலுக்கு பக்கப்பலமாக அமெரிக்கா இருக்கிறது. இப்படியான சூழலில் இஸ்ரேல் உடனான மோதலை ஜோர்டான் தொடங்கினால் அது அந்த நாட்டுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.