சவுதி அரேபியாவில் விபத்தில் 9 இந்தியர்கள் பலி
30 Jan,2025
சவுதி அரேபியாவின் தெற்கு துறைமுக நகரமான ஜிசானில் இருந்து தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு சுமார் 26 தொழிலாளர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் சென்ற பேருந்து டிரெய்லருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் இந்தியர்கள். மற்ற 6 பேர் நேபாளம் மற்றும் கானாவை சேர்ந்தவர்கள். மேலும் தெலங்கானாவை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் உட்பட காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே இறந்தவர்களில் ஒருவர் தெலங்கானாவின் ஜக்கியால் மாவட்டத்தில் உள்ள மெட்பாலி மண்டலத்தை சேர்ந்த கபேலி ரமேஷ்(32) என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் இறந்த மற்ற இந்தியர்களையும் அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்திய தூதரகம் தக்க உதவியை செய்து வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.