சூடானில் உள்நாட்டு போர்.. மருத்துவமனை மீதான தாக்குதலில் 70 பேர் பலி
28 Jan,2025
சூடானில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சூடானின் எல் ஃபஷர் எனும் பகுதியில் செயல்பட்டு வந்த மருத்துவமனை மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. இதில் 2021 முதல் இன்று வரை ஆயிரக்கணக்கனோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
எல் ஃபஷர் பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனையை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையில், ட்ரோனை பயன்படுத்தி துணை ராணுவப்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். துணை ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு, சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.