போர் நிறுத்தம்.. 2ம் கட்டமாக பணய கைதிகள் பரிமாற்றத்தை தொடங்கியது இஸ்ரேல்-ஹமாஸ்!
25 Jan,2025
சுமார் 15 மாதங்களாக நடைபெற்று வந்த இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இரு தரப்பும் பணய கைதிகளை விடுவிக்க தொடங்கியுள்ளன. இன்று 2ம் கட்டமாக பணய கைதிகள் விடுவிக்கும் நடைமுறை தொடங்குகிறது. ஹமாஸ் தரப்பில் இன்று 4 இஸ்ரேலிய பெண் பாதுகாப்பு படை வீரர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இவர்கள் 4 பேரும் 20 வயதுள்ளவர்கள். இது குறித்து ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா வெளியிட்டிருந்த அறிக்கையில், லிரி அல்பாக், கரினா அரிவ், டேனியல் கில்போவா மற்றும் நாமா லெவி என விடுவிக்கப்பட இருக்கும் பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவர்கள் 4 பேரும் கடந்த 2023ம் ஆண்டு தாக்குதலின்போது ஹமாஸ் வசம் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
பணய கைதிகள் பரிமாற்றம் என்பது இது 2வது கட்டமாகும். கடந்த 19ம் தேதி முதல்கட்டமாக ஹமாஸ் தரப்பிலிருந்து 3 கைதிகளும், இஸ்ரேல் தரப்பிலிருந்து 90 கைதிகளும் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருந்தனர். தற்போது 2வது கட்ட கைதிகள் பரிமாற்றம் இன்று பிற்பகல் தொடங்கும் என்ற சொல்லப்பட்டிருக்கிறது. இந்த போரில் பாலஸ்தீனம் பக்கம்தான் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இஸ்ரேலால் சுமார் 47,283 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேபோல படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,472 ஆக இருக்கிறது.