515 முறை குலுங்கிய திபெத்.. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதிர்வுகள்.. 126 பேர் பலி
10 Jan,2025
திபெத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 126 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 515 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதை நிலநடுக்கவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது.
பயங்கர நிலநடுக்கம் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின. இதனால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் திபெத்தின் ஜிசாங்க் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பீதி அடைந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். 126 பேர் பலி நிலநடுக்கம் காரணமாக திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது, நிலநடுக்கம் காரணமாக திபெத்தில் 1,000-த்துக்கும் அதிகமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டன. Powered By நில அதிர்வுகள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில மணி நேரத்துக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும்படி, சீன அதிபர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் 515 முறை அதிர்வுகள் ஏற்பட்டதாக சீன நிலநடுக்கவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.அவற்றில் 95% நில அதிர்வுகள் ரிக்டர் அளவில் 3.0 க்கும் குறைவான அளவிலானவை. சில நில அதிர்வுகள் 4.4 என்ற ரிக்டர் அளவு வரை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் உணரப்பட்டது திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. பீகார், டெல்லி, அசாம், மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் நேபாளம், பூடான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மின்விசிறி, விளக்குகள் நிலநடுக்க பாதிப்பால் லேசாக அசைந்தன. பீகார் தலைநகர் பாட்னா, முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டையா ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டது. மேலும், டெல்லி என்.சி.ஆர். மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன.