அமெரிக்காவில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ, சுமார் 30ஆயிரம் பேர் வெளியேற்றம்
09 Jan,2025
அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றது.சுமார் 30ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடகிழக்கில் உள்ள அடிவாரத்தில் நேற்று முன்தினம் மாலை காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென அடுத்தடுத்த பகுதிகளில் பரவியது. இதனை தொடர்ந்து நகரின் பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் மற்றொரு காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்தது. நேற்று முன்தினம் காலை தொடங்கிய தீ இரவு வரை கட்டுப்பாட்டை மீறி எரிந்துகொண்டிருந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. விமானம் மூலமாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிக்கப்பட்டது.
ஆனால் விமானம் பறக்கமுடியாத அளவுக்கு காற்று வீசியதால் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தாமதமாகின. காட்டுத்தீயில் சேதமடைந்த அல்லது பாதிக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் சரியாக தெரிவிக்கவில்லை. சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த சுமார் 30ஆயிரம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 13,000 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.