புத்தாண்டு தினத்தில் பயங்கரம் மான்டிநேக்ரோவில் போதை நபர் துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் பலி
03 Jan,2025
பொட்கோரிக்கா: ஐரோப்பிய நாடான மான்டிநேக்ரோவில் புத்தாண்டு தினத்தன்று மது போதையில் இருந்த நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் பலியாகினர். போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டிநெக்ரோவில் உள்ள நகரான செட்டின்ஜே என்ற இடத்தில் உள்ள மதுபான பாரில் நேற்று முன்தினம் மது பானம் குடித்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அளவுக்கு அதிகமாக போதையில் இருந்த அகோ மார்டினோவிக்(45) தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து பாரின் உரிமையாளர் மற்றும் அவரின் 2 குழந்தைகளை சுட்டு கொன்றார். பின்னர் சாலையில் நடந்து சென்றவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில்,12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மார்டினோவிக் தப்பி ஓடி விட்டார். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
நகருக்கு உள்ளே வரும் பகுதிகள் மற்றும் வெளியேறும் பகுதிகளை போலீசார் அடைத்து சோதனை நடத்தினர். இறுதியில் மலை பகுதி ஒன்றில் அவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது மார்டினோவிக் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொன்றார். பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அதிபர் யாக்கோவ் மிலாடோவிக்,நாட்டில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தார். மான்டினேக்ரோவில் பலர் துப்பாக்கி வைத்திருந்தாலும் துப்பாக்கிச்சூட்டில் ஒரே நேரத்தில் பலர் மரணமடைவது அங்கு மிகவும் அரிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.