ஏமன் விமான நிலையம், துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார நிறுவனத் தலைவர்
27 Dec,2024
ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உலக சுகாதார நிறுவன தலைவர் நூலிழையில் உயிர் தப்பினார். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் காசாவை உருகுலைத்த இஸ்ரேல் ஹமாஸ் ஆதரவு நாடுகள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு தற்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. எமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையம் மீது திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் பயணிகள் 4 புறமும் சிதறி ஓடினர்.
இஸ்ரேலின் கொடூர தாக்குததால் விமான நிலையம் முற்றிலும் சேதம் அடைந்தது. 3 துறைமுகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் மின் உற்பத்தி நிலையங்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் வின் விநியோகம் முடங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் 6 பேர் உயிரிழந்ததாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏமனில் தாக்குதல் நடத்த போர் விமானங்கள் கிளம்பி சென்ற காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. சனா விமான நிலையத்தின் தாக்குதலின் போது விமானத்தில் ஏற இருந்த உலக சுகாதார நிறுவன தலைவர் நூலிழையில் உயிர்தப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தாம் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தங்களது பணி முடியும் வரை இந்த தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார். ஈரானுக்கு பக்க பலமாக ஏமனில் இருக்கும் கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.