யேமனுக்குள் நுழைந்த இஸ்ரேலிய போர் விமானங்கள், வெடித்து சிதறிய ஹவுதி கட்டமைப்புகள்
26 Dec,2024
இஸ்ரேல் மீதான பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக யேமனில் ஹவுதி படைகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியுள்ளன.
ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பையும் அழிப்பதாக இஸ்ரேலிய தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது, இஸ்ரேல் போர் விமானங்கள் யேமனின் மேற்குக் கடற்கரை மற்றும் நாட்டிற்குள் உள்ள ஹவுதி இலக்குகளைத் தாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, சனா சர்வதேச விமான நிலையத்தில் ஹவுதி அமைப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய உள்கட்டமைப்புகள் மற்றும் ஹவுதி கட்டுப்பாட்டில் தலைநகருக்கு வெளியே இருந்த ஹெசியாஸ் மின் உற்பத்தி நிலையம் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் ஒரு மின் உற்பத்தி நிலையம் உட்பட கடற்கரையில் உள்ள ஹொடைடா, சாலிஃப் மற்றும் ராஸ் காண்டிப் துறைமுகங்களில் உள்ள உள்கட்டமைப்பைப்புகளையும் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உள்கட்டமைப்புகள் ஈரானிய ஆயுதங்களை பிராந்தியத்திற்கு மாற்றவும், மூத்த ஈரானிய அதிகாரிகளின் நுழைவுக்காகவும் ஹவுதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.
நெதன்யாகுவின் இலக்கு
மேலும், தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 11 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தாக்குதல்களை தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஆகியோர் குழுவைத் தாக்கி அதன் தலைவர்களை வேட்டையாடப்போவதாக உறுதியளித்துள்ளனர்.
"ஈரானிய அந்த பயங்கர ஆயுதத்தை துண்டிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் பணியை முடிக்கும் வரை இதில் நிலைத்திருப்போம்” என்று நெதன்யாகு தொடர்ந்தும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.