பிரேசிலில் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 38 பயணிகள் பலி
22 Dec,2024
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு அமைந்துள்ள மினாஸ் ஜெரைஸில் என்ற இடத்தில் பேருந்தும் டிராக்டர் லாரியும் மோதிக் கொண்டன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். அவர்களில் பேருந்து ஓட்டுநர் உட்பட 38 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சேதமடைந்த பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 13 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘சாவோ பாவ்லோவிலிருந்து பாஹியாவுக்கு 45 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியின் மீது மோதியிருக்க வாய்ப்புள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், சம்பவ இடத்தில் நேரில் பார்த்தவரின் கூற்றுப்படி, கிரானைட் லோடு ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து, ஒரு கிரானைட் கல் சாலையில் விழுந்திருக்கலாம் என்றும், அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
விபத்துக்கான சரியான காரணம், அனைத்து தரப்பு விசாரணைக்கு பின்னரே தெரியவரும்’ என்றனர். பிரேசில் விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெளியிட்ட பதிவில், ‘மினாஸ் ஜெரைஸின் தியோஃபிலோ ஒட்டோனியில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.