மாஸ்கோவில் நடந்த குண்டு வெடிப்பில் ரஷ்ய அணுசக்தி பாதுகாப்பு படை தலைவர் உயிரிழப்பு!
17 Dec,2024
மாஸ்கோ: மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படையின் பொறுப்பதிகாரியான மூத்த ஜெனரல் இன்று கொல்லப்பட்டதாக அந்நாட்டு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
கிரெம்ளினின் தென்கிழக்கில் 7 கி.மீ.,தொலைவில் உள்ள ரியாஷன்ஸ்கி பிரோஸ்பெக்ட் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நடந்த இந்தக் குண்டுவெடிப்பில், ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன, உயிரியல் பாதுகாப்பு படையின் தலைவரான லெப்டினட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணைக்குழு கூறுகையில், ரஷ்ய கூட்டமைப்பின் அணுக்கதிர், ரசாயன உயிரியல் பாதுகாப்பு படையின் தலைவர் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரின் உதவியாளர் இருவரும் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் டெலிகிராம் சேனல்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் இடிபாடுகளில் நிறைந்த கட்டிடத்தின் நுழைவாயிலும், பனிப்பரப்பில் ரத்தம் தோய்ந்த இரண்டு உடல்கள் தரையில் கிடப்பதையும் காணமுடிந்தது. இதுதொடர்பாக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் உரிமை கோரல்: இதனிடையே, ரஷ்ய ஜெனரல் கிரில்லோவ் ஸ்கூட்டர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டது தங்களால் தான் என்று உக்ரைன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிரில்லோவ் ஒரு சட்டபூர்வ இலக்கு என்று உக்ரைன் பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக திங்கள் கிழமை கிரில்லோவ் மீது உக்ரைன் குற்றம்சாட்டியிருந்தது. ரஷ்யாவின் ரசாயன ஆயுதங்களின் பயன்பாட்டிற்காக இங்கிலாந்து உட்பட பிற நாடுகள் கிரில்லோவுக்கு தடை விதித்துள்ளன.
மாஸ்கோவில் வெடித்த குண்டு தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்டதாகவும், அதில் 300 கிராம் அளவுக்கு வெடிமருந்துகள் இருந்ததாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.