பிரான்ஸ் நிர்வாக மயோட்தீவை உருக்குலைத்தது சிடோ புயல்..காற்று: 1000 பேர் பலி
16 Dec,2024
பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மயோட் தீவை சிடோ என்ற அதிபயங்கரமான சூறாவளி புயல் தாக்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்காருக்கு அருகில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சுற்றுலா தீவான மயோட், தற்போது இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மயோட் தீவை சிடோ என்ற அதிபயங்கரமான புயல் தாக்கியது. மணிக்கு 220 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்று மொத்த தீவையும் வாரிச் சுருட்டி உள்ளது. குடியிருப்புகளா குப்பைமேடுகளா என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு பல ஆயிரம் வீடுகள் புயல் காற்றால் சூறையாடப்பட்டு சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டுள்ளன.
சூறாவளியால் பல ஆயிரம் மரங்கள் வேரோடு பிடுங்கி எரியப்பட்டுள்ளன. அத்துடன் மின்சார விநியோகத்திற்கான மொத்த உள்கட்டமைப்புகளும் இடிந்து விழுந்துள்ளன. அரசு கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்து கட்டுமானங்களும் உலுக்கப்பட்டதால் அதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒரே நாளில் மொத்த மக்களும் உணவு, குடிநீருக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விமான நிலையமும் சேதம் அடைந்துள்ளது. தகவல் தொடர்பு நிலையங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.