தென்கொரியாவில் அவசர நிலை அடுத்து என்ன? கட்டுப்பாடுகள்!
03 Dec,2024
தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். அவசரநிலை பிரகடனத்தால் தென்கொரியாவில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் தோன்றி தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் அறிவித்துள்ளார். ஜனநாயக நாடான தென்கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தென்கொரிய அதிபர் அறிவித்ததை ஏற்க மறுத்த அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதிபரின் உத்தரவை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தில் தீர்மனம் கொண்டு வந்தன. தென்கொரியாவில் எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பாக காட்சியளிக்கிறது. நாடாளுமன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென்கொரிய நடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மையை இழந்தது. எதிர்கட்சிகளின் தொடர் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. பட்ஜெட் விவகாரத்திலும் மோதல் போக்கு ஏற்பட்டது. இத்தகைய சூழலுக்கு மத்தியில் தான் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனத்தால் அங்கு என்ன நடக்கும்? என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று இங்கே பார்க்கலாம். * அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படும். நாடாளுமன்றம், உள்ளூர் கவுன்சில்கள், அரசியல் கட்சிகள், பேரணிகள், போராட்டங்கள் என அனைத்தும் தடை செய்யப்படும். * ஊடகங்கள் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். பிரிண்ட், ரேடியோ, தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைத்தளம் என அனைத்தும் தீவிர தணிக்கை செய்யப்படும். * தென்கொரியாவில் இந்த சட்டம் அமலில் இருக்கும் வரை எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது. வன்முறை பதற்றத்தை தூண்டும் வகையில் பேசக்கூடாது.
மருத்துவர்கள், நர்சுகள் என அனைத்து மருத்துவ பணியாளர்களும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சமூக மருத்துவ பணிக்கு திரும்ப வேண்டும்.சம்பந்தப்பட்ட அதிகரிகள் உத்தரவை ஏற்று முழுமையாக பணியாற்ற வேண்டும். பணி செய்ய தவறினால் அவசர சட்ட விதிகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கபடும். * அவசர நிலை பிரகடனத்தால் பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் சற்று சிரமமான சூழல் ஏற்படும். அரசு உத்தராவி மீறினால் உடனடியாக கைது, தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள்.