புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 40 கி.மீ. தூரத்தில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டு, தொடர்ந்து முன் நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"ஃபெஞ்சல் புயலின் இன்று மாலை 5:30 மணி அளவில் கரையைக் கடக்கத் துவங்கியுள்ளதாக," சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாட்டுக் கடற்கரையில், சென்னையிலிருந்து தெற்கே 90 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 60 கி.மீ கிழக்கு மற்றும் வடகிழக்கே, மகாபலிபுரத்தில் இருந்து 50 கி.மீ தென்-தென்கிழக்கே நிலை கொண்டுள்ள புயல் 6 மணிநேரத்தில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது அடுத்த 3 முதல் 4 மணிநேரத்தில் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதாகவும், கடல் பக்கத்தில் மேகங்கள் இல்லாமல் காணப்படுவதாகவும், புதுச்சேரியில் கனமழை இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 7 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இன்று (30-11-2024) இரவு 10 மணி வரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிகன மழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதோடு, ஈரோடு, கரூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைப் பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் இன்று (30.11.2024) இரவு 7 மணிவரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் எழும்பூர், பெரம்பூர், பழவந்தாங்கல், ரங்கராஜபுரம், திருவொற்றியூர் அஜாக்ஸ் உள்பட 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. ராஜா முத்தையா சாலை, மில்லர்ஸ் ரோடு, அண்ணா மேம்பலத்தின் இணைப்புச் சாலை ஆகிய பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
சென்னை மாவட்டம், வேளச்சேரி விஜயநகரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த சக்திவேல் குடும்பத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து ரூபாய் 5 இலட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதென்ன?
“தொடர்ந்து 2-3 நாட்களாக மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு அது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களை தொடர்பு கொண்டு நிவாரணப்பணிகள், முகாம்கள் பற்றி தொடர்ந்து மேற்பார்வை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து எந்த ஒரு ஆபத்தான செய்தியும் வரவில்லை, நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது”, என்று சென்னை எழிலாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
“இங்கு கனமழை பெய்து வருகிறது, எந்த NDRF குழுவோ, நிவாரண உதவியோ, அரசு அதிகரியோ இங்கு வரவில்லை. ஒரு வாரமாக மீன் பிடிக்கச் செல்லவில்லை, எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பத்திருக்கிறது”, என்று மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ஒரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரவும், புறப்படவும் இருந்த அனைத்து விமான சேவைகளையும் இண்டிகோ நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. வானிலை சற்று சீரானவுடன் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து விமானச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழை பெய்தாலும் மெட்ரோ ரயில் சேவைகள் எந்த தாமதமும், வழித்தட மாற்றமும் இல்லாமல் வழக்கம்போல இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது.
முன்னேற்பாடுகள் நிலவரம் என்ன?
புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைக் தவிர்த்துப் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜே.சி.பி இயந்திரங்களும் 806 படகுகளும் மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைப்பகுதிகள் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல்
படக்குறிப்பு,கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்துள்ளதாக, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நேற்று தெரிவித்திருந்தது.
சென்னை சேப்பாக்கத்தில் செயல்படும் மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில் வெள்ளியன்று (நவம்பர் 29) அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.
நேற்று, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“கடந்த 4 நாட்களாக புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரையிலும் சுமார் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை முதல் அனைத்து மீனவர்களுக்கும் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது”, என்று புதுச்சேரி மூத்த காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் மழை எப்போது வரை தொடரும்?
நாளை (01-12-2024) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது, என தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அறிவித்துள்ளது.