இன்று நள்ளிரவு 1 மணிக்குள் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சேப்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு 11 மணியளவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், அசோக்நகர், தியாகராய நகர், சைதாப்பேட்டை, வடபழனி, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், அம்பத்தூர், கொளத்தூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், நங்கநல்லூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும்,
சென்னையின் புறநகர் பகுதிகளான சேலையூர், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நள்ளிரவு 1 மணிக்குள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து இன்று (நவம்பர் 29 ஆம் தேதி) காலை வரை ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. பின்னர், வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து, இன்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தொடர்ந்து, வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை மறுநாள் (நவம்பர் 30 ஆம் தேதி) காலை, காற்றின் வேகத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே, வடதமிழகம் - புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் 65 கி.மீ வேகத்தில் வீசும், இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.