மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரான் உச்ச தலைவர் விஷம் குடித்தாரா?..
18 Nov,2024
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரான் உச்ச தலைவர் விஷம் குடித்ததாக தகவல் வெளியான நிலையில், இஸ்ரேல் போருக்கு மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், மேற்கண்ட அமைப்புகளுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அதனால் இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல்கள் குறைந்துள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (85) மிகக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், அதனால் அவரது இரண்டாவது மகன் மொஜ்தாபா கமேனி என்பவர் ஈரானின் புதிய உச்ச தலைவராக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, விஷம் குடித்ததாக தெரிகிறது. அதனால் அவர் வென்டிலேட்டர் ஆதரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், இன்றைய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமா நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பின்னர், இஸ்ரேல் தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தான் அலி கமேனி கடுமையாக நோய்வாய்ப்பட்டார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.