எல்லையிலிருந்து 5 கிமீ. தூரத்தில் உள்ள லெபனான் கிராமத்தை கைப்பற்றிய இஸ்ரேல்: மசூதி, வீடுகள் தகர்ப்பு
17 Nov,2024
லெபனான் கிராமத்தை கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம், மசூதி, வீடுகளை குண்டு வைத்து தகர்த்ததாக கூறப்படுகிறது. லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக்டோபர் 1ம் தேதி தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதில் முறையாக, நேற்று அதிகாலை, எல்லையில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சமா கிராமத்தின் மலைப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. ஹிஸ்புல்லா உடனான கடும் சண்டைக்குப் பிறகு மலைப்பகுதி கிராமத்தில் நுழைந்த இஸ்ரேல் படையினர் அங்கிருந்த பழமையான மசூதி, வீடுகளை குண்டுவைத்து தகர்த்ததாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறிது நேரத்தில் அங்கிருந்து இஸ்ரேல் படைகள் பின் வாங்கி உள்ளன. அக்டோபர் 1ம் தேதி தரைவழி தாக்குதல் தொடங்கியதில் இருந்து சமா கிராமத்தின் மலையை கைப்பற்றியதே இஸ்ரேல் படையின் ஆழமான ஊடுருவல் என லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹிஸ்புல்லாவை சம்மதிக்க வைக்க உதவுமாறு ஈரானின் உதவியை லெபனான் அரசு நாடி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.