ஈரான் (Iran) தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் (Israel) திரா நகரின் மீது இன்று (03.11.2024) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு (Tehran) அருகே உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை கடந்த 26ஆம் திகதி அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலால் தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என ஈரான் கூறியுள்ளது. அதே சமயம், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.
இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசன விதிகளுக்கு எதிரானது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
மேலும், ஐ.நா. சாசனம் 51-வது பிரிவின்படி, ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உள்ளது என ஈரான் அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார்.
தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், "ஈரான் மற்றும் ஹமாஸ் (Hamas), ஹிஸ்புல்லா (Hezbollah) உள்ளிட்ட எதிர்ப்பு கூட்டணிகளுக்கு எதிராக, எதிரிகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.
இந்நிலையில், ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் திரா நகரின் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை லெபனானில் (Lebanon) இருந்து ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பெரும்பாலானவை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், திரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை தாக்கிய ஒரு ஏவுகணையால் 11 பேர் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே காசா முனையில் (Gaza Strip) ஹமாஸ் அமைப்பினரோடும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரோடும் போரிட்டு வருகிறது.
இந்த சூழலில், ஈரான் தலைவரின் எச்சரிக்கையை தொடர்ந்து இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல்கள் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவிலான மோதல் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.