இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா, லெபனானில் 140 பேர் பலி: மருத்துவமனைகள் மீது குண்டு வீச்சு
01 Nov,2024
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் காசா, லெபனானில் 140 பேர் பலியானதாகவும், மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் படைகள் நேற்று ஒரே நாளில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 75 பேரும் மற்ற இடங்களில் 20 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் நுசைரத்தில் உள்ள அகதிகள் முகாம் மீதான நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல் கமல் அத்வான் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மருந்துகள் மற்றும் மருத்துவமனை உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த கட்டிடம் சேதமடைந்தது.
மருத்துவமனை ஊழியர்கள் பலர் காயமடைந்தனர். தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தனித்தனி தாக்குதல்களில் ஆறு சுகாதார பணியாளர்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் பெய்ரூட் அருகே உள்ள தஹியாவிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து காசாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டது. நேற்று மட்டும் காசா, லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.