காட்டுக்குள் கிடைத்த 436 சடலங்கள்.. பட்டினி போட்டு பரலோகம் அனுப்பிய மதபோதகர்..
16 Sep,2024
கடவுளைக் காண்பிப்பதாகக் கூறி, 400க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்த மத போதகரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
கென்யாவின் மலிண்டியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷகாஹோலா காட்டில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் ‘குட் நியூஸ்’ இன்டர்நேஷனல் சர்ச் என்ற பெயரில் தேவாலயம் ஒன்று இயங்கி வந்தது. இந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், சந்தேகத்தின் பெயரில் தேவாலயத்தைச் சுற்றி அந்நாட்டு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின் போது சில சடலங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் சந்தேகம் வலுக்க அப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது தோண்டத் தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர். இதனையடுத்து கென்யா துணை ராணுவத்தின் உதவியுடன் அந்தப் பகுதி முழுவதும் தோண்டிப் பார்த்ததில் சுமார் 436 சடலங்கள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் பழங்குடியினர்களில் சில பிரிவினர் மொத்தமாகத் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். ஆனால் இந்தக் காட்டில் அப்படிப்பட்ட பழங்குடியினர் யாரும் கிடையாது. இப்படி இருக்கையில் எப்படி இவ்வளவு உடல்கள் வந்தது என்பது குறித்து விசாரணை தொடங்கியது. அப்பகுதியில் அமைந்திருந்த ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல்’ தேவாலயத்தின் நிர்வாகிகள் மற்றும் பாதிரியாரிடம் விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.
Also Read | அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொலை செய்ய மீண்டும் முயற்சி - நடந்தது என்ன?
இந்த தேவாலயத்தின் பாதிரியார் பால் மெக்கன்சி தனது சர்ச்சுக்கு வரும் மக்களில் மிகவும் பலவீனமான மனம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுப்பார். பின்னர் அவர்களிடம் ஏசுவைக் காண வேண்டுமா? என்று ஆர்வத்தைத் தூண்டுவார். ஆர்வ மிகுதியில் வரும் பக்தர்களை வைத்து சில வித்தியாசமான சடங்குகளை நடத்துவார். இறுதியாக ஏசுவைக் காண வேண்டும் எனில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் வற்புறுத்துவார்.
இவரது பேச்சைக் கேட்ட பக்தர்கள், ஷகாஹோலா காட்டில் உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கியுள்ளனர். இப்படியாகத்தான் 400க்கும் மேற்பட்டோர் கொடூரமான பட்டினியில் இருக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாதியில் தப்பியோட நினைப்பவர்களை அடித்துக் கொன்றதற்கான ஆதாரங்களும் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள காடு முழுவதுமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலங்களில் 191 பேர் குழந்தைகள் என்பதும் தெரியவந்துள்ளது. கென்யா செஞ்சிலுவைச் சங்கம் அப்பகுதியில் சுமார் 600 பேரைக் காணவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. காட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முக்கிய குற்றவாளியான பால் மெக்கன்சி மீது தீவிரவாத நடவடிக்கைகளுக்கான விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் உலகின் மிக மோசமான வழிபாட்டுப் படுகொலை சம்பவம் என அறிவிக்கப்பட்டுள்ளது.