வியட்நாமை புரட்டிப்போட்ட 'யாகி' புயல்!
12 Sep,2024
வியட்நாமை தாக்கியுள்ள யாகி புயலால் அந்த நாடு கடும் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக சாம்சங், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களும், பல ஆயிரம் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உருவான ‘யாகி’ (Yagi )புயல் பிலிப்பைன்ஸ், தென் சீனா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வியட்நாம் நாட்டை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உருவான யாகி புயல் கடந்த சனிக்கிழமை அன்று வியட்நாம் தலைநகரான ஹனோய் மாகனத்தில் கரையை கடந்தது. இந்தப் புயலின் காரணமாக வியட்நாமின் வட கடலோர பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் காற்றுவீசியது. இந்த புயல் கரையை கடந்த பிறகும்கூட வியட்நாம் வட கடலோர பகுதிகளில் தொடர் கன மழை பெய்துவருகிறது.
இந்தக் கன மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி இது வரை 63 பேர் பலியாகியுள்ளதாகவும், 39 பேர் காணாமல் போயிருப்பதாகவும், 752 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்னும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்தப் புயல் தொடர்பாக அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆசிய கண்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை வந்த புயல்களிலேயே இது தான் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. அதேபோல், வியட்நாமில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த புயலாக இது உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
இதுவரை யாகி புயலினால் வியட்நாமில், 300 பில்லியன் அளவுக்கு சேதாரம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபோக வடக்கு வியட்நாமில், 1,48,600 ஹெட்கர் விளைநிலங்களும், 50,000 வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.