புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஒரே நாளில் இந்த அளவுக்குகொட்டி தீர்த்தது இதுவே முதல்முறை என வானிலை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் பல பகுதிகளில்வெள்ளம் பெருக்கெடுத்ததையடுத்து சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. விமான சேவையிலும் தடங்கல் ஏற்பட்டது. இந்த கனமழைக்கு டெல்லியில் 5 பேரும், குருகிராமில் 3, கிரேட்டர் நொய்டாவில் 2 பேர் என 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமாச்சலில் மேகவெடிப்பு: இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் மேகவெடிப்பின் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறியதாவது: மேகவெடிப்பினால் ஷிம்லாவில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மண்டி மற்றும் குலு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த நிலவரங்களை உடனுக்குடன் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்.
மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட உள்ளூர் நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ராணுவம் மற்றும் விமானப் படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
வானிலை மைய அறிவிப்பின்படி அடுத்த 36 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை விட்டு விலகி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இரங்கல்: சிம்லா, மண்டி மற்றும் குலுவில் மேகவெடிப்பின் காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரடியாக பார்வையிட்டு வருகிறார். நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தேசிய, மாநிலபேரிடர் மீட்பு குழுவினர் அர்ப்பணி்ப்புடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், காணாமல் போனவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்று எக்ஸ் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியானாவிலும் மழை: பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் பல பகுதிகளில் நேற்று மழை பெய்ய தொடங்கியது. மோகா, டர்ன் தரன், பதிண்டா, பெரோஸ்பூர், ஃபரித்கோட், அம்பாலா பகுதிகளில் கணிசமான மழையளவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
தலைநகரான சண்டிகரில் 22.8 மி.மீ. அளவுக்கு மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது.