உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடங்கியது:
19 Jul,2024
உலகம் முழுவதும் பல நாடுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல சேவைகள் செயல் இழந்ததால் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் ஏராளமான இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விண்டோஸ் மென்பொருள் உள்பட மைக்ரோசாப்ட்டின் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மென்பொருள் சேவை பாதிப்பால் ஐ.டி. நிறுவனங்கள் தவித்து வருகின்றன.
புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் புளூ ஸ்கிரீன் தோன்றுகிறது. மென்பொருளில் ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. விண்டோஸ் செயலிழந்ததால் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. விண்டோஸ் மென்பொருள் பழுதால் உலகம் முழுவதும் வங்கிகள், மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் பழுதால் உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
விமான டிக்கெட்டுகள் புக்கிங் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை பாதிக்கபப்ட்டுள்ளதால் பயணிகளுக்கு கைகளால் எழுதி போர்டிங் பாஸ்’ வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விமானங்கள் புறப்பாடு தாமதம் ஏற்படுகிறது. விண்டோஸ் கோளாறால் உலகம் முழுவதும் கணினிசார்ந்த தொழில்நுட்பத்துறைகள் அனைத்தும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.