பயங்கர காட்டுத் தீயால் நியூ மெக்சிகோவில் அவசரநிலை 1,400 கட்டிடங்கள் நாசம், 2 பேர் பலி!
20 Jun,2024
நியூ மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதால் மாநில ஆளுநர் அவசரநிலையை நேற்று அறிவித்துள்ளார்.
தெற்கு நியூ மெக்ஸிகோவில் வேகமாக நகரும் இரண்டு காட்டுத்தீயால் 1,400-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நாசமாகியுள்ளன. இந்த தீயில் பேட்ரிக் பியர்சன் என்பவர் உள்பட இருவர்தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். ஒருவர் காரில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவர் குறித்த விவரம் தெரியவில்லை என்று நியூ மெக்சிகோ காவல் துறையினர் தெரிவித்தனர்.
ரூய்டோசோவின் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீயால் 8,000 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அது மட்டுமின்றி ரூய்டொசோவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் 23,000 ஏக்கருக்கு மேல் தீயால் கருகியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
சவுத் ஃபோர்க் ஃபயர் மற்றும் சால்ட் ஃபயர் என்று பெயரிடப்பட்ட இந்த காட்டுத் தீ, இந்த வார தொடக்கத்தில் வெப்பமான வெப்பநிலைக்கு மத்தியில் தொடங்கியது, மேலும் நேற்று ஏற்பட்ட வானிலை மாற்றம் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியை சிக்கலாக்கியது. இந்த நிலையில் லிங்கன் கவுண்டி, மெஸ்கலேரோ அப்பாச்சி ஆகிய பகுதிகளில் அவசர நிலையை ஆளுநர் மிச்செல் லுஜன் க்ரிஷாம் நேற்று வெளியிட்டார். அத்துடன் சவுத் ஃபோர்க் ஃபயர் மற்றும் சால்ட் ஃபயர் ஆகியவற்றிற்கு எதிராக போராட கூடுதல் நிதி மற்றும் ஆதாரங்களை விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீயை அணைக்க விமான டேங்கர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் ரிடார்டன்ட்களை வீசி வருகின்றனர். இதுவரை 528-க்கும் மேற்பட்டோர் அவசரகால முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.
இந்த நிலையில், தேசிய வானிலை சேவை நேற்று பிற்பகல் லிங்கன் கவுண்டிக்கு திடீர் வெள்ள எச்சரிக்கையை வெளியிட்டது. இதையடுத்து இப்பகுதியில் உள்ளவர்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.