ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்: 27 பேர் பலி
09 Jun,2024
ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ரஷ்ய எல்லை பகுதிகள் மீது உக்ரைன் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தெற்கு குபன், அஸ்ட்ராகான், மேற்கு துலா பகுதி மற்றும் மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட கிரிமீயன் தீபகற்பத்தில் 25 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள சடோவ் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். இதேபோல் கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள லுஹான்ஸ்க் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களில் உக்ரைன் பகுதிகள் சிதிலமடைந்தன.