ஹமாஸ் கடத்திய 4 பிணைக்கைதிகள் மீட்பு: இஸ்ரேல் தாக்குதலில் 94 பேர் பலி
09 Jun,2024
ஹமாஸ் கடத்தி சென்ற பணய கைதிகள் 4 பேரை இஸ்ரேல் நேற்று மீட்டுள்ளது. பிணைக்கைதிகள் மீட்பு நடவடிக்கையில் இரு தரப்பினருக்கும் கடும் சண்டை மூண்டதில் குழந்தைகள்,பெண்கள் உட்பட 94 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென தாக்குதல் நடத்திய 1,200 இஸ்ரேலியர்களை கொன்றனர்.250 பிணைக் கைதிகளை கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.8 மாதங்களாக நீடிக்கும் போரில் 36,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட ஒரு வார போர் நிறுத்தத்தின் போது,100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எஞ்சியுள்ள 130க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்கும்படி ஹமாஸை இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில்,பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையாக மத்திய காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில்,4 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த தாக்குதலிலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 94 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் நடவடிக்கையில் நோவா அர்காமனி(25),அல்மோக் மேயர் ஜான்(21), ஆண்ட்ரே கோஸ்லோவ்(27),ஸ்லோமி ஜீவ் (40) ஆகிய 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் ஒரு வீர நடவடிக்கை என்றும் பிணைக் கைதிகளை மீட்கும் வரை சண்டை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்தார்.