காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான எதிர்பார்ப்பு குறைந்து வரும் நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய காசாவில் புரைஜ் மற்றும் மகாசி அகதி முகாம்களை இலக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இஸ்ரேலியப் படை தரை மற்றும் வான் வழியாக கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தப் பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது தரைப் படை நடவடிக்கைக்கு மத்தியில் இஸ்ரேல் வான் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் புரைஜ் பகுதியில் உளவு வழிகாட்டலுடன் படை நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய காசாவில் தற்போது மருத்துவ வசதிகளை வழங்கி வரும் ஒரே மருத்துவமனையாக உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை காயமடைந்தவர்களால் நிரம்பி இருப்பதாகவும், பலரும் தரையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்கு நகரான ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கையால் அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் பெற்றவர்களாவர்.
ரபா மீதான தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் எச்சரித்திருந்தபோதும் இஸ்ரேலிய டாங்கிகள் அந்த நகரின் மத்திய பகுதியை அடைந்துள்ளன. இதனால் அண்மைக்காலத்தில் அந்த நகரில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புரைஜ் அகதி முகாமில் பாடசாலை வளாகம் ஒன்று உட்பட பல இடங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதலை தீவிரப்படுத்தி இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் இங்கும் இஸ்ரேல் இராணுவம் கடந்த டிசம்பர் தொடக்கம் நடத்தும் இரண்டாவது படை நடவடிக்கையாக இது உள்ளது. முன்னதாக புரைஜ் அகதி முகாமை தளமாகக் கொண்ட ஹமாஸ் படைப்பிரிவை ஒழிப்பதாகக் கூறியே இஸ்ரேல் அங்கு தாக்குதலை நடத்தி இருந்தது. இந்நிலையில் அந்த முகாமுக்கு இஸ்ரேல் மீண்டும் திரும்பி இருப்பதன் மூலம் அங்கு பலஸ்தீன போராளிகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றனர் என்பது தெரிகிறது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘இரவு முழுவதும் குண்டு சத்தம் நிற்கவில்லை’ என்று டெயிர் அல் பலாவில் இருந்து இடம்பெயர்ந்த 30 வயதான ஆயா என்பவர் தெரிவித்தார்.
புரைஜுக்கு டாங்கிகளை அனுப்பிய இஸ்ரேல் இராணுவம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளான அல் மகாசி மற்றும் அல் நுஸைரத் அதேபோன்று டெயிர் அல் பலா நகரங்களில் வான் தாக்குதல்களை நடத்தியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘புதிய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பற்றி பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆக்கிரமிப்பாளர்கள் நகரங்கள் அல்லது அகதி முகாம் ஒன்றை அழுத்தம் கொடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர். தமது வீடுகள் அல்லது கூடாரங்களில் பாதுகாப்பாக இருக்கும் பொதுமக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? அரபு மற்றும் உலகத்தால் போரை நிறுத்த முடியாதது ஏன்’ என்று ஆயா ரோய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் ‘சாட்’ செயலி வழியாக தெரிவித்தார்.
மத்திய காசாவின் டெயிர் அல் பலா நகரில் உள்ள வீடுகள் மீது இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. மகாசி முகாமில் உள்ள டார்விஷ் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் 243 ஆவது நாளாக நேற்று நீடித்த இஸ்ரேலின் தாக்குதல்களில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகர் மற்றும் தெற்கின் கான் யூனிஸ் நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் பல வாரங்கள் படை நடவடிக்கையை மேற்கொண்டு பயங்கர தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலியப் படை கடந்த வெள்ளிக்கிழமையே அங்கிருந்து வாபஸ் பெற்றது. இந்தப் படை நடவடிக்கையின்போது அந்த நகர் முற்றாக சின்னாபின்னமாக்கப்பட்டது. படைகள் வாபஸ் பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட மீட்புப் பணிகளில் அங்கு 360 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு பெரும்பாலானவை பெண்கள் மற்றும் சிறுவர்களுடையது என்று காசா சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36,500ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் மூன்று கட்ட போர் நிறுத்த திட்டம் ஒன்றை வெளியிட்டபோதும் இஸ்ரேல் அல்லது ஹமாஸ் தரப்பினர் இதுவரை அதற்கு உறுதியான ஒப்புதலை அளிக்கவில்லை.
நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெறுவது தொடர்பில் தெளிவாக குறிப்பிடாத இஸ்ரேலுடனான உடன்படிக்கை ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடந்த செவ்வாய்க்கிழமை (04) பேசிய மூத்த ஹமாஸ் அதிகாரியான ஒசாமா ஹம்தான் குறிப்பிட்டுள்ளார்.
‘முடிவு அல்லது காலக்கெடு இல்லாது பேச்சுவார்த்தை கதவை திறப்பது பற்றி இஸ்ரேல் கூறுகிறது. இது கைதிகளை விடுவிக்கும் வரையான ஒரு கட்டம் பற்றியே இஸ்ரேல் விரும்புவதை உறுதி செய்வதாக உள்ளது. அதன் பின்னர் எமது மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் போரை மீண்டும் ஆரம்பிக்கும்’ என்று ஹம்தான் கூறினார்.
மறுபுறம் பைடனின் போர் நிறுத்த திட்டம் தொடர்பில் இஸ்ரேலிய அரசும் விலகி இருப்பதோடு ஹமாஸை ஒழிக்கும் வரை போரை தொடர்வது பற்றியே கூறி வருகிறது.
எவ்வாறாயினும் இந்த உடன்படிக்கையை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்தி இருக்கும் பைடன், புதிய பேச்சுவார்த்தை முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. வின் தலைவரான பில் பர்ன்ஸை கட்டாருக்கு அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பர்ன்ஸ் மத்தியஸ்தர்களுடன் இணைந்து தொடர்ந்து செயற்படவிருப்பதாக இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
பைடனின் மத்திய கிழக்குக்கான ஆலோசகர் பிரெட் மக்கர்க்கும் கட்டாருக்கு விரைந்திருப்பதாக அக்சோஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது. ‘போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும் பொறிமுறை தொடர்பில் பேசுவதற்கு எகிப்து பாதுகாப்பு தூதுக் குழு ஒன்று கட்டார் சென்று கட்டார் மற்றும் அமெரிக்க சகாக்களுடன் பேசவுள்ளது’ என்று எகிப்து அரசுடன் தொடர்புபட்ட அல் கெஹரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இரு தரப்பில் இருந்தும் நம்பிக்கை தரும் அறிவிப்புகளை இன்னும் பார்க்கவில்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்த கட்டார், ஆனால் முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவு தொடர்பில் இரு தரப்புடனும் பணியாற்றி வருவதாக தெரிவித்தது.