அகமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது.
இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளான சிறுவர், சிறுமியர் வந்ததால், அவர்களில் பலர் இதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
இது குறித்து ராஜ்கோட் நகராட்சி ஆணையர் ஆனந்த் படேல் கூறுகையில், “மீட்புப் பணி முடிந்த பின்னரே முழு விவரம் தெரியவரும்” என்றார். மீட்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இது தொடர்பாக முதல்வர் பூபேந்திர படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், “ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜூ பார்கவ் இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும். நகரின் அனைத்து விளையாட்டு மையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில், இந்த பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த பலரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ராஜ்கோட் ஆட்சியர் பிரபாவ் ஜோஷி கூறுகையில், “விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு மாலை 4:30 மணியளவில் அழைப்பு வந்தது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்” என்றார்.
பிரதமர் மோடி இரங்கல்: இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், “ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகவும் வேதனையடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் மீண்டு வர பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது” என பதிவிட்டுள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமும் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். மேலும், விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.