நாட்டின் பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையுடனான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகூடிய பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல, கருவலகஸ்வெவ, மாதம்பை, முந்தல், புத்தளம், சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, கல்பிட்டி , வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களே வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவுகளில் 6,815 குடும்பங்களை சேர்ந்த 25,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முந்தல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவில் 855 குடும்பங்களை சேர்ந்த 3,042 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 537 குடும்பங்களை சேர்ந்த 1775 பேர் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டு 10 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 6 தற்காலிக முகாம்களும், முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 3 தற்காலிக முகாம்களும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்தில் ஒரு தற்காலிக முகாமும் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் நிலவும் வெள்ள நிலைமையினால் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை , கண்டி , நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சியினை எதிர்பார்ப்பதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தொடரும் பருவப் பெயர்ச்சி மழையினால் மேலும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்தனகல்லு ஓயா, உருவல் ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, மினுவாங்கொட , ஜா எல, கடான, வத்தளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் குடா கங்கை, மகுரு கங்கையில் சிறு வௌ்ள நிலைமை ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக புலத்சிங்கள, மதுராவ, பாலிந்த நுவர பிரதேச செயகத்திற்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலையினால் குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக குடா கங்கை வான் பாய்ந்தமையினால், புலத்சிங்கள , மோல்காவ பிரதான வீதி, தம்பல , நாலியத்த, எட்டம்பகஸ் சந்தி உள்ளிட்ட பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவாத நிலையில், குடிசேட் மாவத்தை, சமகி மாவத்தை, கோலிததிஸ்ஸ மாவத்தை உள்ளிட்ட நகரங்கள் தொடர்ந்தும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை ஹெமில்டன் கால்வாயில் இருந்து நீர் வழிந்தோடியமையினால், கொழும்பு பிரதான வீதியின் மஹவெவ உள்ளிட்ட சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மழையுடனான வானிலை காரணமாக தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் 3 அடி வரை திறந்து விடப்பட்டுள்ளன.
நில்வலா கங்கையின் நீர் மட்டம் தற்போது உயர்வடைந்துள்ளது.
கிங் கங்கையினை அண்மித்த பகுதியில் உள்ள தாழ்நிலப்பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பத்தேகம வக்வெல்ல வீதியின் எகலிய பகுதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.
கலாவாவியின் இரண்டு வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறந்துவிடப்பட்டுள்ளன.
இராஜாங்னை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.