திடீரென கட் ஆன சிக்னல்.." ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டருக்கு என்ன நடந்தது..
19 May,2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி.. இவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியானது.
முதலில் அவரது விமானம் கட்டுப்பாட்டை இழந்து மோசமாகத் தரையிறங்கியதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னணி: அதாவது ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அஜர்பைஜான் சென்று திரும்பும் போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய மூன்றாவது அணையைத் திறக்கும் விழா அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற நிலையில், இதில் கலந்து கொள்ளவே ரைசி அஜர்பைஜான் சென்றுள்ளார். 2023இல் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அஜர்பைஜானின் தூதரகம் மீதான துப்பாக்கிச் சூடு, அஜர்பைஜான்- இஸ்ரேல் தூதரக உறவு உள்ளிட்ட காரணங்களால் ஈரான்- அஜர்பைஜான் உறவு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த நிகழ்ச்சி இரு தரப்பு உறவை மேம்படுத்தும் என நம்பப்பட்டது.
என்ன நடந்தது: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டரில் திரும்பும் போது தான் விபத்து நடந்துள்ளது. அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. மோசமான வானிலை காரணமாக விமானம் அங்கிருந்த மலைப் பகுதியில் மோதியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக ஈரான் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை எங்கு நடந்தது: சுங்குன் என்ற காப்பர் சுரங்கத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் சென்ற போது தான் சிக்னல் கட் ஆகியுள்ளது. அதன் பிறகு கட்டுப்பாட்டு மையத்தால் ஹெலிகாப்டரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இந்த இடம் ஈரானின் ஜோல்ஃபா மற்றும் வர்சகான் இடையே அமைந்துள்ளது.. அங்கு தான் விமானம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் மீட்புப் பணிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சரியாக விபத்து எங்கு நடந்தது என்பது தெரியாததால் மீட்புப் படையினர் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்
மேலும், முதலில் ஹெலிகாப்டரில் சென்று மீட்புப் பணியை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் மூடுபனி அதிகமாக இருந்ததாலும் வானிலை மோசமாக இருந்ததாலும் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வானிலை: விபத்து நடந்த இடத்தில் மூடுபனி சூழ்ந்து இருப்பதாகவும் குளிரும் அதிகம் இருப்பதாகவும் அங்குள்ள ஈரான் நாட்டுச் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இதனால் மீட்புப் படையினர் தங்கள் வாகனத்தைச் சாலையிலே நிறுத்துவிட்டு நடந்தே தேடுதலை மேற்கொண்டு வருகிறார்கள். அதிபருக்கு என்ன ஆனது என்பது குறித்து துல்லியமான தகவல்கள் கிடைக்காததால் ஈரான் முழுக்க ஒருவித குழப்பம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் இருந்தவர்கள் யார்: இந்த ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் (ஈரான் நாட்டின் உள்ள ஒரு பிராந்தியம்) ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜானுக்கான ஈரானிய உச்சபட்ச தலைவரின் பிரதிநிதி அயதுல்லா முகமது அலி அலே-ஹஷேம் ஆகியோர் இந்த ஹெலிகாப்டரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் துணை அதிபரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளார்.