மும்பையில் திங்கள்கிழமை அன்று வீசிய புழுதிப் புயல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக, ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பை புறநகரில் அமைந்துள்ள காட்கோபர் பகுதியில் உள்ள சம்தா காலனியின் ரயில்வே பெட்ரோல் பம்ப் அருகே ஒரு ராட்சத விளம்பர பேனர் பொருத்தப்பட்டிருந்தது.
திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் திடீரென வீசிய பலத்த சூறைக்காற்றால் இது சரிந்து விழுந்தது. 70வு50 மீட்டர் என்ற அளவில் இருந்த மிகப்பெரிய பேனர் அது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விளம்பரப் பேனர் பெட்ரோல் பம்ப் மீது விழுந்துள்ளது. மழை மற்றும் புழுதிப் புயல் காரணமாக ஏராளமான மக்கள் அந்த பெட்ரோல் பம்பில் ஒதுங்கி நின்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் கூறுகையில், மீட்புப் பணி நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும், மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனர் பூஷன் கக்ரானி, “காட்கோபரில் ஒரு விளம்பரப் பேனர் சரிந்து விழுந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.
இதுவரை 64 பேர் ராஜாவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மொத்தம் நான்கு பேர் இறந்துள்ளனர், சம்பவ இடத்திலும் நான்கு பேர் இறந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.”
இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் , “நான் அங்கு இருந்தேன். மோசமான புயல் வீசிக்கொண்டிருந்தது. கனமழையும் பெய்து கொண்டிருந்ததால் காரை ஓரமாக நிறுத்தி, அங்கேயே சிறிது நேரம் இருந்தோம்.
திடீரென விளமபரப் பலகை சரிந்து விழுந்தது. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உட்பட அங்கு நின்றிருந்த மக்களும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.” என்று கூறினார்.
விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விபத்தில் காயமடைந்த நோயாளிகளை சந்திக்க மருத்துவமனைக்கு வந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், இன்னும் அந்த இடத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிக்கு முன்னுரிமை தரப்படுவதாக கூறினார்.
“மும்பையில் உள்ள அனைத்து விளம்பரப் பலகைகள் குறித்தும் சிறப்பு ஆய்வு நடத்தப்படும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும்” என்று ஷிண்டே கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை பார்வையிட்டார்.
“இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பிறகு, தேவைப்பட்டால் கொலை வழக்கும் பதிவு செய்யப்படும்” என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.
“இந்த முழு விவகாரத்திலும் பல முறைகேடுகள் நடந்துள்ளது தெரிகிறது. எனவே முதலமைச்சரிடம் பேசி, இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
“இந்த விளம்பர பேனருக்கு அனுமதி இருக்கிறதா? அனுமதி கொடுத்தது யார்? அனுமதி முறையான வழியில் பெறப்பட்டதா? இவையெல்லாம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும்.
இவ்வளவு பெரிய விளம்பர பேனரை நிறுவும் போது, இதுபோன்ற பலத்த காற்று வீசினால் என்னவாகும் என்பது குறித்து ஏதேனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? இது தொடர்பான தகவல்களும் விசாரணையில் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
மும்பையில் வீசிய புயலால் நகரின் சாலை, விமானம் மற்றும் ரயில் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புயலின் போது பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
முலுண்ட் மற்றும் தானே ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மேல்நிலை கம்பியை இணைக்கும் கம்பம் இடிந்து விழுந்ததால் இந்த பாதையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இது தவிர மும்பை மெட்ரோ சேவையும் புயல் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு மெட்ரோ சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
மும்பை விமான நிலையமும் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டது. இதனால் விமானங்கள் தரையிறங்குவதும், புறப்படுவதும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.