பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு... ஆப்கானில் தொடரும் சோகம்!
13 May,2024
வெள்ளம், பூகம்பம், பனிச்சரிவு, நிலச்சரிவு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளுக்கு எதிராக மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. மேலும் பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட பனி, மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 33 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது.
திடீர் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்த நிலையில், கால்நடைகள் அழிந்துவிட்டன. தெருக்கள் சகதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் தனது 13 குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டதாக கதறும் முஹம்மது யாகூப், தங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, உறைவிடம் இல்லை, போர்வைகள் எதுவும் இல்லை என்றும், உயிர் பிழைத்தவர்கள் சமாளிக்க போராடுவதாக கவலையோடு தெரிவித்தார். உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை கோரிய தலிபானின் பொருளாதார அமைச்சர் முகமது ஹனிப், ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான அமைப்புகள் மற்றும் தனியார் வணிகங்களை வழங்கவும் வலியுறுத்தினார். 2021 இல் வெளிநாட்டுப் படைகள் பின்வாங்கியதால், தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு, அரசாங்க நிதிகளின் முதுகெலும்பாக இருந்த வளர்ச்சி உதவிகள் வெட்டப்பட்டதால், அது உதவி பற்றாக்குறையை எதிர்கொண்டது.