இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு,பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்
02 May,2024
இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டதால் பள்ளிகள், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்தோனேசியாவின் சுலாவசி மாகாணத்தில் உள்ள ருவாங் தீவில் உள்ள எரிமலை நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி 7 கிமீக்கு உட்பட்ட பகுதியில் இருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலைக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் எரிமலையைச் சுற்றி 4 கி.மீ. தூரத்துக்கு எந்தப் பணியும் மேற்கொள்ளக் கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக சுலாவசி மாகாணத்தில் உள்ள பள்ளிகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் மானடோ சர்வதேச விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலை வெடிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.