முற்றிலும் சிதைந்த காசா.. வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 வருஷமாகும்! ஐ.நா சொன்ன பகீர் தகவல்
27 Apr,2024
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மூர்க்கமாக போரை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் வீசிய குண்டுகள் சில இன்னும் வெடிக்காமல் காசா மண்ணில் புதைந்திருக்கிறது. இந்த குண்டுகளை கண்டுபிடித்து அழிக்க 14 ஆண்டுகள் ஆகலாம் என ஐ.நா அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது. மறுபுறம் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்காவில், போருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்த போராட்டம் நியூயார்க் பல்கலைக்கழகம், மினசோட்டா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், டெக்சாஸ்-ஆஸ்டின் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், எமர்சன் கல்லூரி, எம்ஐடி, டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், தி நியூ ஸ்கூல், லாஸ் ஏஞ்சல் என 15 பல்கலைக்கழகத்திற்கு பரவியுள்ளது.
இந்த போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க அமெரிக்கா அரசு காவல் துறைக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் கொலம்பியா பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமான மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நிலைமை இப்படி இருக்கையில் காசா மீது இஸ்ரேல் வீசிய குண்டுகள் சில இன்னும் வெடிக்காமல் மண்ணில் புதைந்திருக்கிறது. இந்த குண்டுகளை கண்டுபிடித்து அழிக்க 14 ஆண்டுகள் ஆகலாம் என ஐ.நா அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவையின் (UNMAS) மூத்த அதிகாரி பெஹ்ர் லோதம்மர் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் நடத்திய போர் காசாவில் 37 டன் குப்பைகளை விட்டு சென்றிருப்பதாக கூறியுள்ளார். “அங்கிள் ஜி”.. கல்யாண வீட்டு மூலைகளில் அமர்ந்து புலம்புவார்.. குஜராத்தில் வறுத்தெடுத்த பிரியங்கா! இது குறித்து விரிவாக பேசிய அவர், "சுமார் 7 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் ஏராளமான கட்டிடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டிருக்கிறது. இதில் சில குண்டுகள் வெடிக்காமல் இருக்கிறது. எவ்வளவு குண்டுகள் வெடிக்காமல் இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. ஒவ்வொரு போரிலும் சுமார் 10% குண்டுகள் வெடிக்காமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த குண்டுகளை அகற்ற எங்களுக்கு 7,50,000 நாட்கள் ஆகும். நாங்கள் 100 டிரக்குகளை கொண்டு வேலை தொடங்கினால் கூட இந்த குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்" என்று கூறியுள்ளார்.