சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈராக் ராக்கெட் வீசி தாக்குதல்!
22 Apr,2024
ஈராக்கில் இருந்து சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி 5 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈராக்கின் ஜும்மார் நகரில் இருந்து வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி நேற்று 5 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளன. ஈராக்கில் ஈரானிய ஆதரவு குழுக்கள் அமெரிக்க படைகளுக்கு எதிரான தாக்குதல்களை கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் நிறுத்தின. அதன் பிறகு அமெரிக்கப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும்.
ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுதானி அமெரிக்காவுக்கு சென்று வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்த ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு துறை மற்றும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் அளித்த தகவல் படி, சிரியா எல்லையை ஒட்டி உள்ள ஜும்மார் நகரத்தில் ஒரு சிறிய டிரக்கின் பின்புறத்தில் ஒரு ராக்கெட் ஏவுகணை நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிகிறது.
அதேசமயம் வான் பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்து கொண்டிருந்தபோது எந்த தாக்குதலுமின்றி வெடிபொருட்களுடன் நின்றுகொண்டிருந்த டிரக் தீப்பிடித்தது. அமெரிக்க விமானங்களிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வெடிபொருள் டிரக் தீப்பிடித்ததா அல்லது வேறு காரணமா என்பதை விசாரணை நடத்தாமல் எங்களால் சொல்ல இயலாது என ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், சிரிய எல்லையில் இருந்து தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக ஈராக்கிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, ஈராக்கிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், 'ஈராக்கியப் படைகள் சிரிய எல்லைக்கு அருகில் குற்றவாளிகளைக் குறிவைத்து பரந்த அளவிலான தேடுதல் நடவடிக்கையை துவங்கியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் வான்வழி தாக்குதலில் தகர்க்கப்பட்ட ஒரு டிரக் கைப்பற்றப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.