இஸ்ரேலுக்கு உடனடி பதிலடி தர இப்போதைக்கு திட்டமில்லை: ஈரான்
19 Apr,2024
இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாதுகாப்புப் படை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “இன்று அதிகாலை இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ஃபாஹான் பகுதியில் உள்ள அணு உலையை சுற்றிய பகுதியில் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் ஆயுதங்களைப் பயன்படுத்தினோம்" என்று கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (எப்.14) சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூளூம் சூழல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க பிரதமரின் உத்தரவுக்கு காத்திருப்பதாக அந்நாட்டு ராணுவத் தளபதி கூறியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய ஈரான், இன்னொரு முறை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம் என்று பயங்கர எச்சரிக்கை விடுத்தது. இந்தச் சூழலில் ஐ.நா. அறிவுரை, உலக நாடுகளின் வலியுறுத்தல்கள் மத்தியில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிள்ளது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இது பற்றி ஈரானோ, இஸ்ரேலோ அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், ஈரான் உயரதிகாரி ஒருவர் வெளிநாட்டு ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை” எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இஸ்ரேல் - ஈரான் தங்களுக்கு இடையேயான மோதலைப் பெரிதாக்கி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதி நிலவுவது அவசியம். அடுத்தக்கட நடவடிக்கைகளை இருதரப்புமே தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் மோதல் பின்னணி என்ன? - இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ராணுவம் ஆதரவு அளித்து வந்தது. இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஈரான் ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியிருந்தது.