ஈரானின் பாரிய இராணுவ தளம் , அணு மின்னிலையம் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்
19 Apr,2024
இஸ்ரேலின் தாக்குதலை உறுதிப்படுத்தி ஈரான்
இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலின் பின்னர் அணுமின் நிலையங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை ஈரானின் அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய நகரமான இஸ்பஹானில் உள்ள விமான நிலையம் மற்றும் இராணுவ தளத்திற்கு அருகில் பல வெடிப்புகள் கேட்டதை அடுத்து ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்பஹான் மாகாணத்தில் குண்டுவெடிப்புகளை அறிவித்ததுடன், பல நகரங்களில் அரசாங்க தொலைக்காட்சி அறிக்கைகளை வெளியிட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பதிலடி தாக்குதல்
பல விமானங்கள் ஈரானிய வான்வெளியில் திருப்பி விடப்பட்டதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேலினால் இன்று குறி வைக்கப்பட்ட இஸ்பஹான் நகரம், ஈரானிய இராணுவத்திற்கான ஒரு பெரிய விமான தளத்தையும் அதன் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய தளங்களையும் கொண்டுள்ளது.
நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டல் மையம் உட்பட பல ஈரானிய அணுசக்தி நிலையங்களை இஸ்பஹான் மாகாணம் கொண்டுள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு 'உடனடி' பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் ஈரானின் முக்கிய நகரங்களான இஸ்ஃபஹான், ஷசிராக்ஸ் மற்றும் தெஹ்ரான் ஆகியவற்றில் வணிக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் நாட்டின் அரசு ஊடகம் வேளியிட்டுள்ளது.