ஓமனில் 18 பேர் பலி., வாரி சுருட்டும் வெள்ளம்!
16 Apr,2024
ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று முதல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக துபையின் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓமனில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த நாடுகளின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். துபாயில் இடி மின்னலுடன் கனமழையும், சூறாவளி காற்றும் வீசி வருகிறது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி, ஷார்ஜாவிலும் கனமழை கொட்டி வருகிறது. அந்நகரங்களில் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அவை மூடப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கால் பிரபலமான குவைத் மார்க்கெட் பகுதியும் மூடப்பட்டுள்ளது.