ஆப்கன் வெள்ளம்,3 நாட்களில் 33 பேர் பலி, 606 வீடுகள் சேதம்!
15 Apr,2024
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் 33 பேர் பலியாகினர்; 27 பேர் காயமடைந்துள்ளனர். 606 வீடுகள் சேதமடைந்தன.
வெள்ளம், பூகம்பம், பனிச்சரிவு, நிலச்சரிவு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளுக்கு எதிராக மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. மேலும் பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்ட பனி, மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 33 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சாயிக் மேலும் கூறும்போது. “ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளம், பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வெள்ளத்தில் இதுவரை 606 வீடுகள் சேதமடைந்துள்ள. சுமார் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது” என்று தெரிவித்தார்.