அதிர வைக்கும் ஐ.நா அறிக்கை., வெப்ப அலையால் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்!
12 Apr,2024
கடும் வெப்ப அலை காரணமாக கிழக்கு ஆசிய நாடுகளில் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் புவிவெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை ஐ.நா சபை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால், அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்களில் வெளியேறும் புகை உள்ளிட்டவைகளின் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து அதன் மூலம் புவி வெப்பமும் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பிருந்தே வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இயல்பை விட அதிக அளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 24 கோடி குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளிலும், பள்ளிகளிலும் குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும், கோடை காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தியுள்ளது.