இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் புதல்வர்கள் பலி
11 Apr,2024
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் தனது மூன்று புதல்வர்களும் பேரனும் கொல்லப்பட்டுள்ளதை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உறுதிசெய்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் தங்கள் குடும்பத்தவர்களை கொலை செய்கின்றது என்பதற்காக ஹமாஸ் தலைவர்கள் பின்வாங்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளிற்கான ஹமாசின் வேண்டுகோள்களை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தின் மீதான தாக்குதல் இஸ்ரேலின் தோல்வியை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ள ஹமாஸின் தலைவர் எனது பிள்ளைகளின் இரத்தம் பாலஸ்தீன மக்களின் பிள்ளைகளை விட பெறுமதியானது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காசா நகரில் உள்ள கடற்கரையோர அகதி முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் தலைவரின் மகன் ஒருவர் பெப்ரவரி மாதம் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அவர் தனது குடும்பத்தவர்களை இழந்திருந்தார்.
இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் டோஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட ஹமாஸ் தலைவர் சென்றவேளை அவருக்கு அவரின் புதல்வர்கள் கொல்லப்பட்டமை குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.