நிலநடுக்கத்துக்கு 9 பேர் உயிரிழப்பு, 1,000 பேர் காயம்
05 Apr,2024
தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இந்தத் தகவலை தைவான் நாட்டு மத்திய புவியியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்தது. நிலம் மற்றும் நீர்ப் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் தைபே நகரின்பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர். அங்கு மின் இணைப்புஉடனடியாக துண்டிக்கப்பட்டது. தைவானின் கிழக்குப்பகுதியில் உள்ள நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் விழுந்தன. தைபே நகரில் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது ரயிலில் பயணம் செய்த மக்கள் ரயில் குலுங்கியதைக் கண்டு பயந்த காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னதாக தைவானில் 1999-ம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 2,400 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தற்போதுதான் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட15 நிமிடங்களில் ஜப்பானில் உள்ள யோனகுனி கடல் பகுதியில் வழக்கத்தை விட கூடுதலான உயரத்தில் அலைகள் எழும்பின. இதேபோல் ஜப்பானின் மியாகோ, அமெரிக்கா விலுள்ள புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி உள்ளது என்றும், ஜப்பானில் உள்ள புவியியல் ஆய்வு மையத்தில் இது ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பான் கடல் பகுதியில் அலைகள் 3 மீட்டர் உயரத்துக்கு எழக்கூடும் என ஜப்பான் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று பிலிப்பைன்சிலும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சில் இருந்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. தைவானில் மட்டும் நிலடுக்கத்தால் 9 பேர்உயிரிழந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
தைவான் அதிபர் சை லிங்-வென் கூறும்போது, “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணியில் மாகாண நிர்வாகங்களும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிவாரணப் பணிகளுக்காக தேசிய ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்