ஆப்கானிஸ்தானில் வான்வழியாக புகுந்து தாக்கியது பாகிஸ்தான்... 8 பேர் பலி!
18 Mar,2024
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இன்று திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 3 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் இன்று நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு இடைக்கால அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், "பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் மாகாணங்களான பாக்டிகா, கோஸ்ட் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென விமானம் மூலம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட 8 பேரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இஸ்லாமிய எமிரேட் இந்த தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறது. பாகிஸ்தான் தனது பிரச்சினைகள் மற்றும் வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு ஆப்கானிஸ்தானை குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இல்லாத மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்." என்றார்.
தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நடைபெற்ற இறுதி சடங்கு
தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நடைபெற்ற இறுதி சடங்கு
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் சமீபத்தில் பாதுகாப்புப் படைகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு அதிகாரிகள் உள்பட 7 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உறுதியளித்திருந்தார். இந்த அறிக்கை வெளியான ஒரே நாளில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக உடனடி பதில் எதுவும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு 'ஹபீஸ் குல் பஹதர்' குழு பொறுப்பேற்றுள்ளது. குல் பஹதர் குழுவின் போராளிகள் ஆப்கானிஸ்தான் எல்லையில், குறிப்பாக கோஸ்டிலிருந்து செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்டிகா மாகாணம் பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ளது. கோஸ்ட், வடக்கு வஜிரிஸ்தானுக்கு அருகில் அமைந்துள்ளது.