விஷமாக மாறிய ஆமைக்கறி... 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி; 78 பேர் கவலைக்கிடம்
10 Mar,2024
தான்சானியா தேசத்தில் ஆமைக்கறி உண்டதில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிழக்கு ஆப்பிரிக்க தேசமான தான்சானியாவின் பகுதியளவு தன்னாட்சிப் பிராந்தியமான சான்சிபாரில், கடல் ஆமைக்கறியை உண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த கறியை உண்டதாக மேலும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடற்கரை மக்கள் மத்தியில் கடல்வாழ் உயிரினங்களை உண்பது இயல்பான வாழ்வியலாக தொடர்ந்து வருகிறது. அவற்றில் மீனினங்கள் பிரசித்தி பெற்றவை. கடல் வாழ் ஆமையை கறியாக உண்பதும் சில பிராந்தியங்களில் பிரசித்தி பெற்றுள்ளது. . இவற்றின் மத்தியில் தான்சானியா ஆமைக்கறி விபரீதம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
சான்சிபார் தீவுக்கூட்டத்தில் உள்ள பெம்பா தீவில் கடல் ஆமைக்கறி ஏகப்பிரசித்தம். சான்சிபர் மக்கள் மத்தியில் கடல் ஆமை இறைச்சியின் சுவை காரணமாகவும் அங்கே ஆமைக்கறிக்கு பெரும் வரவேற்பு உண்டு. எனினும் அண்மைக்காலமாக கடல் ஆமைக்கறி உண்போர் மத்தியில் அதன் சுவைக்கு அப்பால், உயிர்ப்பலி அபாயங்கள் தொடர்ந்து அருகின்றன.
செவ்வாயன்று அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நேர்ந்ததில், வெள்ளிக்கிழமை அன்று அதன் பின்னணியில் இருந்த ஆமைக்கறி கண்டறியப்பட்டது. பலியானவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் அனைவரும் ஆமைக்கறி சாப்பிட்டு இருப்பதும் மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
இதனையடுத்து சான்சிபார் அதிகாரிகள், ஹம்சா ஹசன் ஜூமா என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, கடல் ஆமைகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக நவம்பர் 2021 அன்று, ஆமைக்கறியை உண்டதாக 3 வயது குழந்தை உட்பட ஏழு பேர் பெம்பாவில் இறந்தனர். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுவையான ஆமைக்கறி விஷமாக மாறியது எப்படி என்று தான்சானியா மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆமைகளை பாரித்த விஷத்தின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தவும் சான்சிபார் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.