நடுவானில் பழுதான விமானம்; நெடுஞ்சாலை அருகே விழுந்து நொறுங்கி விபத்து... 5 பேர் பலி
05 Mar,2024
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையின் அருகே விழுந்து நொறுங்கிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் ஜான்.சி.டியூன் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை இரவு 7:40 மணியளவில் விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி ஒருவர், தான் ஓட்டி வரும் விமானம் பழுதடைந்து இருப்பதால் அவசரமாக தரையிறங்க வேண்டும் என அனுமதி கோரியுள்ளார். விமான நிலைய அதிகாரிகளும் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமான நிலையத்தை அடைவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சிறிது நேரத்தில் விமான நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐ-40 என்ற நெடுஞ்சாலை அருகே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸாரும் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகி, பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக தீயை அணைத்துவிட்டு விமானத்தில் இருந்தவர்களை மீட்க முயற்சித்த போது விமானத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார், நெடுஞ்சாலையில் விழுந்திருந்த விமான பாகங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனிடையே இந்த விமானம் எங்கிருந்து கிளம்பியது, எங்கு சென்று கொண்டிருந்தது, என்பது தொடர்பாக தற்போது தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது.
விபத்தில் சிக்கிய ஐந்து பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவிற்கு மோசமாக எரிந்துள்ளதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த விபத்தால் தரையில் இருந்த யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.