பற்றி எரிந்த வதந்'தீ'. ஜார்க்கண்டில் ரயில் மோதி 12 பயணிகள் பலி!
29 Feb,2024
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரயில் மோதி 12 பேர்பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இருந்து பாகல்பூர் நோக்கி நேற்று இரவு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. கலாஜாரியா ரயில் நிலையத்திற்கு ரயில் சென்றபோது, திடீரென ரயிலில் தீப்பற்றியதாக வதந்தி பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த பயணிகள் சிலர் தண்டவாளத்தில் குதித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு ரயில் அந்த பயணிகள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும் இறப்புகளின் சரியான எண்ணிக்கையை ரயில்வே அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தால் இறந்தவர்களின் உடல் பாகங்கள், ரயில் தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பயணிகளின் காலணிகள், ஆடைகள் உள்ளிட்டவை தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கின்றன.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டது.
விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகிறது. உயிரிழந்த இருவரின் ஆதார் அட்டைகள் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் சசரம் பங்கஹா கதிஹாரில் வசிக்கும் மணீஷ் குமார், தாபரி ஜாஜா ஜமுயில் வசிக்கும் சிக்கந்தர் குமார் ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஜம்தாரா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.