2 பணய கைதிகள் மீட்பு காசாவில் இஸ்ரேல் அதிரடி: வான்வழி தாக்குதலில் 67 பேர் உயிரிழப்பு
13 Feb,2024
ரஃபா: பாலஸ்தீனம்- எகிப்து எல்லையான ரஃபாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் புகுந்து 2 பணய கைதிகளை மீட்டனர். இதை தொடர்ந்து,ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர். ஹமாஸ் தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த நாட்டில் இருந்து 200-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக 5 மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 100க்கும் மேற்பட்ட பணய கைதிகள் இன்னும் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.
இந்நிலையில்,ரஃபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேல் சிறப்பு படை நேற்று அதிரடியாக புகுந்து அங்கு இருந்த 2 பணய கைதிகளை மீட்டனர். இதை தொடர்ந்து அருகில் உள்ள இலக்கு வைக்கப்பட்ட இடங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியதில்,67 பேர் பலியாயினர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள். இந்த தாக்குதலால் காசாவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 28 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களில் 12,300 பேர் சிறுவர்கள் என்று காசா மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, செங்கடலில் சென்ற ஸ்டார் ஐரீஸ் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.