ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கை தொடர்கின்றது
05 Feb,2024
யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது சனிக்கிழமை அமெரிக்காவும் பிரி;ட்டனும் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்திற்கு பதில்நடவடிக்கையாக செங்கடலில் அமெரிக்காவின் இலக்குகளை தாக்கிவரும் ஈரான் சார்பு குழுவை மேலும் பலவீனமாக்குவதற்காக இந்த தாக்குதலை அமெரிக்காவும் பிரிட்டனும் மேற்கொண்டுள்ளன.
போர்க்கப்பல்களையும் விமானங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கடற்படை கலங்கள் மீதான தங்களின் சட்டவிரோத தாக்குதல்களை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் நிறுத்தாவிட்டால் அவர்கள் தொடர்ந்தும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற செய்தியை தெரிவிப்பதற்காகவே இந்த தாக்குதல் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.
13 பகுதிகளில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன அமெரிக்காவின் போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட எவ்ஏ 18 போர் விமானங்களும்,பிரிட்டனின் டைபூன் எவ்ஜிஆர்4 ர விமானங்களும் தாக்குதலை மேற்கொண்ட அதேவேளை அமெரிக்காவின் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக மேற்கொண்டுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
யேமனின் ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து முன்னெடுத்துவரும் தாக்குதல்களிற்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
நேற்றும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த தாக்குதலிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான கூட்டறிக்கையொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெஸ் வெளியிட்டுள்ளார்.
செங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் அப்பாவி மாலுமிகளின் உயிர்களிற்கும் சர்வதேசவர்த்தகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் திறனை குறைப்பதை நோக்கமாக கொண்ட நோக்கிலேயே இந்த துல்லியமான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
செங்கடல் பகுதியில் பதற்றத்தை குறைப்பதும் அந்தபகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதுமே இந்த தாக்குதலின் நோக்கம் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஹெளத்திகிளர்ச்சி குழுக்களின் தலைமைக்கு எங்களின் எச்சரிக்கையை மீண்டும் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகமுக்கியமான கடல்பாதையில் சுதந்திரமான வர்த்தகம் மற்றும் உயிர்களை நாங்கள் பாதுகாப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்