ஈராக், சிரியா மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்; 18 பேர் பலி!
05 Feb,2024
ஈராக், சிரியாவில் ஈரான் ஆதரவு ஆயுத படைகள் மற்றும் தெஹ்ரான் ஆதரவு போராளிக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா நேற்று பதிலடி விமானத் தாக்குதல்களை நடத்தியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தில் கடந்த வாரம் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தாக்குதலாக ஈராக், சிரியாவில் ஈரான் ஆதரவு ஆயுத படைகள் மற்றும் தெஹ்ரான் ஆதரவு போராளிக் குழுக்கள் தொடர்புடைய 85 இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று விமானத் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 18 போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமெரிக்கா, "ஈரான் நாட்டின் பிராந்தியத்தைத் தாக்கவில்லை. அமெரிக்கா மீதான எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஈரானுடனான முழு அளவிலான போர் இருதரப்பிலுமே தவிர்க்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது பதிலடி நடவடிக்கை தொடங்கியது. நாம் தேர்ந்தெடுக்கும் நேரம், இடங்களில் பதிலடி தொடரும்.
அமெரிக்கா, மத்திய கிழக்கிலோ அல்லது உலகில் வேறு எங்குமோ மோதல்களை விரும்பவில்லை. அமெரிக்காவுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கும் அனைவருக்கும் இதைத் தெரியப்படுத்துங்கள். ஒரு அமெரிக்கருக்குத் தீங்கு செய்தால் கூட, நாங்கள் பதிலடி கொடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகள் 18 பேர் கொல்லப்பட்டதை சிரிய மனித உரிமைகள் போர் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.
வான்வழித் தாக்குதல்கள் மூலம் கட்டளை, கட்டுப்பாடு மற்றும் புலனாய்வு மையங்கள், போராளி குழுக்கள், ஈரானிய படைகளுக்கு சொந்தமான ராக்கெட், ஏவுகணை, ட்ரோன் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பான சென்ட்காம் தெரிவித்துள்ளது.